தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பிரதமர் மோடி இன்று எங்களுக்கு அளித்த தாரக மந்திரம் மிகவும் முக்கியமானது. லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் அனைவரும் நாட்டிற்காக உழைக்க வேண்டும். அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர் ஆக இருந்தாலும், நாட்டிற்கு சேவை செய்வதை கடமையாக கருத வேண்டும். தே.ஜ., எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும், நாட்டை முதன்மைப்படுத்தி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
விதிகள்
இரண்டாவதாக, எம்.பி.,க்கள் நடத்தை பற்றி அறிவுரை வழங்கினார். பார்லி., விதிகளை பின்பற்றி, ஒவ்வொரு எம்.பி.,யும் தொகுதி பிரச்னைகளை அவையில் எடுத்துரைக்க வேண்டும். தண்ணீர், சுற்றுச்சூழல், சமூக பிரச்னைகளில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் பார்லிமென்ட் விதிகள் மற்றும் பார்லிமென்ட் ஜனநாயகத்தை பின்பற்றுவதுடன், சிறந்த எம்.பி., ஆக செயல்பட வேண்டும். பிரதமரின் இந்த அறிவுரைகள், அனைத்து எம்.பி.,க்கள், குறிப்பாக முதன்முறை தேர்வான எம்.பி.,க்களுக்கு தாரகமந்திரமாக இருக்கும். இதனை பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.
அனைவரும்
பிரதமர் பேசுவதை, எம்.பி.,க்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். நாட்டின் சிறந்த மக்கள் மோடியை பிரதமர் ஆக்கி உள்ளனர். நேற்று லோக்சபாவில் ராகுல் நடந்து கொண்டதை போன்று, தேஜ கூட்டணியினர் செய்யக்கூடாது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
ராகுல் போல் செயல்படாதீர்கள்
கூட்டத்தில் எம்.பி.,க்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: லோக்சபாவில் ராகுல் போல் செயல்படாதீர்கள்; தகவல்களை சரிபார்த்து பேசவும், தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவும். காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் எப்படி 3வது முறையாக பிரதமர் ஆனார் என நினைத்து எதிர்க்கட்சிகள் விரக்தி அடைந்துள்ளன. நேருவுக்கு பிறகு இந்திய வரலாற்றில் பலர் நேரடியாகவும், சிலர் ரிமோட் கன்ட்ரோல் மூலமாகவும் பிரதமர் ஆகியுள்ளனர். நேருவுக்கு பிறகு, ஒரு தேவீர் வியாபாரி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றிருப்பதை நினைத்து எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.