மனிதன் விவசாயம் பண்ண துவங்கிய காலத்தில் இருந்தே கால்நடைகள் வளர்ப்பு என்பது விவசாயத்தின் முக்கிய பங்காக இருந்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்துடன் சேர்த்து கால்நடை வளர்ப்பையும் விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில் திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்காகத் தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், செம்மறி ஆடு வளர்ப்புக்கென விவசாயிகளுக்கு மத்திய அரசு சிறப்பு மானியம் வழங்கி வருகிறது. விவசாயத்துடன் சேர்த்து கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் குறித்து தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் குமார் அகர்வால் விளக்கமளித்தார். தேசியக் கால்நடை மிஷனின் கீழ் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செம்மறி ஆடு வளர்ப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அரசாங்கத்தின் இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் 100 ஆடுகள் முதல் 500 ஆடுகள் வரை வளர்க்கலாம். இதில் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியம் கிடைக்கும்.
100 ஆடுகளை வளர்ப்பதற்கு ரூ.20 லட்சம் வழங்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இரண்டு முறை தலா ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 200 ஆடுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு ரூ.40 லட்சமும், 300 ஆடுகளுக்கு ரூ.60 லட்சமும், 400 ஆடுகளுக்கு ரூ.80 லட்சமும், 500 ஆடுகளை வளர்க்க ரூ.1 கோடி திட்டமும் உள்ளது. இவை அனைத்திற்கும் 50 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்..
இந்த ஆடு வளர்ப்புத் திட்டத்தின் முழு பலன்களைப் பெற, விவசாயத் துறையின் உத்யம் மித்ரா இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த செம்மறி ஆடு வளர்ப்புத் திட்டத்தின் பலன்களைப் பெற, விவசாயிகள் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் ஆடு வளர்ப்புப் பயிற்சி கட்டாயம் பெற வேண்டும். இது தவிர, விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலம் இருப்பதும் அவசியமாகும். மேலும் இந்த நிலத்தின் மீது எந்தவிதமான கடன்களும் இருக்கக்கூடாது. ஒருவேளை விவசாயிகளின் நிலத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டு இயங்கினாலும், அந்த விவசாயி செம்மறி ஆடு வளர்ப்புத் திட்டத்தின் பயன்களைப் பெற முடியாது. விவசாயிக்கு சொந்த நிலம் இல்லையென்றால், 10 ஆண்டுகளுக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ஆடுகளை வளர்க்கலாம்.
செம்மறி ஆடு வளர்ப்புத் திட்டத்தின் பலன்களைப் பெற, ஆன்லைன் படிவத்தின் போது திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு கால்நடைத் துறையைச் சேர்ந்த குழு இதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். பூர்த்தி செய்த படிவம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும். அதன் பிறகு வங்கி நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிக்குக் கடன் வழங்கும்.
ரூ.20 லட்சம் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் பங்காக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். பின்னர் வங்கியிலிருந்து ரூ.8 லட்சம் கடனாகப் பெற வேண்டும். இதில் 25% தொகையை விவசாயி செலவழித்த பிறகு, தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.5 லட்சம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். திட்டம் முடிவடைந்தும், இரண்டாவது தவணையாக ரூ.5 லட்சம் தள்ளுபடி தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்.